This Article is From Sep 06, 2019

“பிறந்த குழந்தையை கையில் வைத்திருப்பது போல…”- சந்திராயன் 2 லேண்டிங் பற்றி இஸ்ரோ (ISRO) தலைவர்!

Chandrayaan 2: அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு, நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கிய பெருமையை சந்திராயன் 2 மூலம் இந்தியாவும் பெரும். 

“பிறந்த குழந்தையை கையில் வைத்திருப்பது போல…”- சந்திராயன் 2 லேண்டிங் பற்றி இஸ்ரோ (ISRO) தலைவர்!

இஸ்ரோவின் கன்ட்ரோல் ரூமிலிருந்து சந்திராயன் 2, நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பள்ளிக் குழந்தைகள் நேரலையில் பார்க்க உள்ளனர். 

Bengaluru:

சந்திராயன் 2 விண்கலம், சனிக்கிழமை அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் சந்திராயன் 2 ஆகத்தான் இருக்கும். சந்திராயன் 2-வின் லேண்டர் மற்றும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் மென்மையாக எந்தவித பாதிப்புமின்றி தரையிறங்க எடுத்துக் கொள்ள இருக்கும் ‘அந்த 15 நிமிடம்' என்பது இஸ்ரோ-வின் உச்சபட்ச விஞ்ஞானிகளுக்குக் கூட வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயமாகத்தான் இருக்கும். 

“திடீரென்று ஒருவர் பிறந்த பச்சிளம் குழந்தையை உங்கள் கையில் கொடுப்பது போன்றது. அந்த குழந்தையை பத்திரமாக நீங்கள் பிடித்திருக்க வேண்டுமல்லவா. அது அங்கும் இங்கும் நகரப் பார்க்கும். அதேபோலத்தான் சந்திராயன் 2-வில் இருக்கும் லேண்டரும். அது, அங்கும் இங்கும் அலைபாயும். ஆனால், அதை ஸ்திரமாக தரையிறக்க வேண்டும்” என்று இந்தியாவின் மிகப் பெரும் பெருமையாக கருதப்படும் சந்திராயன் 2 திட்டம் குறித்து விளக்குகிறார் இஸ்ரோ தலைவர் கே.சிவன். 

சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது. 

“இந்த லேண்டர் தரையிறங்குவதுதான் மிகவும் சிக்கலான விஷயம். அதை அடிக்கடி செய்வோருக்கே கடினமாகத்தான் இருக்கும். நாம் இப்போதுதான் முதன்முதலாக அதைச் செய்கிறோம். எனவே, லேண்டர் தரையிறங்கும் அந்த 15 நிமிடம் என்பது எங்களுக்கு டெரராகத்தான் இருக்கும்” என்று திட்டத்தின் சிக்கல்கள் குறித்து பகிர்ந்து கொண்டார் சிவன். 

இஸ்ரோவின் கன்ட்ரோல் ரூமிலிருந்து சந்திராயன் 2, நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பள்ளிக் குழந்தைகள் நேரலையில் பார்க்க உள்ளனர். 

இதுவரை நிலவில் தரையிறங்கிய அனைத்து விண்கலங்களும் அதன் வட துருவத்தில்தான் லேண்ட் ஆகின. சந்திராயன் 2 மூலம் முதன்முறையாக தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ளது இந்தியா. 

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு, நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கிய பெருமையை சந்திராயன் 2 மூலம் இந்தியாவும் பெரும். 

கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னரே, சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், லான்ச்சிற்கு 56 நிமிடங்களுக்கு முன்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் மீண்டும் அது ஜூலை 23 அன்று திட்டமிடப்பட்டது. 

சந்திராயன் 2 திட்டத்திற்கு இஸ்ரோ ஒதுக்கியது சுமார் 1,000 கோடி ரூபாய்தான். இது அமெரிக்காவின் நாசா ஒதுக்கும் பட்ஜெட்டை விட 20 மடங்கு குறைவாகும். சமீபத்தில் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்' படத்தின் பட்ஜெட்டைவிட இது குறைவானதாகும். 


 

.