தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது
Bengaluru/ New Delhi: தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அதேநாளில் புவிவட்டப்பாதையிலும் விண்கலம், நிலைநிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நிலையாக அதிகரிக்கப்பட்டு சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், நேற்று முன் தினம் அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.
சந்திரயான் -2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலவே இருந்தபோது, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விக்ரம் லேண்டரின் நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ உயரத்தில் இறங்கிக் கொண்டிருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் அறிவித்தார். என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, லேண்டர் விக்ரமின் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும், அதில் வெற்றிப் கிடைத்தால் நிலவில் இருந்து தேவையான தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்றார்.
மேலும், விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தெரிவித்துள்ளார்.
நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம், இந்த லேண்டர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இருந்தாலும் அதிலிருந்து தகவல் தொடர்பு ஏதும் கிடைக்கவில்லை, தொடர்ந்து முயற்சிக்கிறோம் என்று சிவன் தெரிவித்துள்ளார்.
With input from ANI