Chandrayaan-2: விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவுக்கு தகவல் தெரிவித்தார் சண்முக சுப்ரமணியம்
Chennai: இந்தியாவின் கனவுத்திட்டமான சந்திராயன்2-ன் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்த சென்னை பொறியாளருக்கு நாசா நன்றி தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்ததன் மூலம் நாசா விஞ்ஞானிகளுக்கு சண்முக சுப்ரமணியன் (33) பெரிதும் உதவியுள்ளார்.
முன்னதாக, சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. செப்டம்பர் 7ஆம் தேதி நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. எனினும், விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது குறித்து நாசாவின் விண்கலத்தாலும் கண்டறிய முடியவில்லை.
இதைத்தொடர்ந்து, நாசா கடந்த செப்.26ம் தேதி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய, லேண்டர் தரையிரங்கும் முன் அதே பகுதியில் எடுத்த புகைப்படங்களையும், இந்த புகைப்படங்களையும் ஒப்பிட்டு அடையாளப்படுத்தும்படி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தது.
Chandrayaan 2: விக்ரம் வேண்டரை கண்டுபிடிக்க நாசா வெளியிட்ட புகைப்படங்கள்.
இதைத்தொடர்ந்து, விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய, லேண்டர் தரையிரங்கும் முன் அதே பகுதியில் எடுத்த புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படங்களையும் ஒப்பிட்டு தமிழக இளைஞர் சண்முக சுப்ரமணியன் அடையாளப்படுத்தியுள்ளார். பின்னர் தான் கண்டுபிடித்த புள்ளியை அது தான், விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் என நாசாவிற்கு தெரியப்படுத்தினார்.
இதையடுத்து, சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு அந்த இடத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கூறிய இடத்தில் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம் என நாசா தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்ற இளைஞர் ஒருவர் நாசாவின் புகைப்படங்களை ஆராய்ந்து, முதல்முறையாக லேண்டர் இருப்பதற்கு சாதகமான அடையாளத்தை கண்டுபிடித்ததாக தனது ட்வீட்டரில் நாசா தெரிவித்தது.
இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதை முதன்முதலாக சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
நாசாவின் விண்கலமான LRO விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணித்தது. அது மட்டுமன்றி, அந்தப் பகுதியைப் புகைப்படமும் எடுத்தது. ஆனால், அந்தப் பகுதியில் வெளிச்சம் மிகக் குறைவாக இருந்ததால், அந்தப் புகைப்படங்களில் விக்ரம் லேண்டரை அடையாளம் காண முடியவில்லை. எனினும் எடுத்த அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் கொண்ட கடின முயற்சியால், விக்ரம் லேண்டர் இருப்பிடம் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக என்டிடிவியிடம் சுப்பிரமணியன் கூறும்போது, கடந்த அக்.3 ஆம் தேதி தான் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததை நாசாவுக்கு தெரியப்படுத்தினேன்.
தொடர்ந்து, இரண்டு மாதம் கூடுதலாக தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் நாசா அதிராப்பூர்வமாக அறிவித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய தினமும் 7 மணி நேரம் தனது பணியை முடித்து வந்த பின்னர் வீட்டில் செவிட்டதாகவும், இதற்காக இணைய தொடர்புடன் கூடிய லேப்டாப்பை மட்டுமே பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தேடுதலை 2 கி.மீ தூரத்திற்குள் மட்டுமே நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தான் கண்டறிந்ததை நாசா மற்றும் இஸ்ரோவுக்கு ட்வீட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். மேலும், நாசாவின் விண்கலமான LRO குழுவில் உள்ள இரண்டு விஞ்ஞாணிகளுக்கு தனியாக மெயிலும் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, தற்போது, நாசாவில் இருந்து தனது முயற்சிக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது என்று சுப்ரமணியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது மிகப்பெரிய முயற்சி தான், அதே நேரத்தில் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. விக்ரம் லேண்டர் நிலவின் மேல்பரப்பில் இறங்கிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். இஸ்ரோ மீண்டும் ஒரு வெற்றிகராமான சந்திராயன் 3-ஐ செலுத்தும் என்றும், நிச்சயம் அது சந்திரனில் தரையிரங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சண்முக சுப்ரமணியன் மதுரையை சேர்ந்தவர் ஆவார். சென்னையில் ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவர் திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அவரது இந்த முயற்சி இளைஞர்களை நிச்சயம் ஊக்குவிக்கும் என்று விண்வெளி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
(With inputs from AFP and IANS)