This Article is From Aug 20, 2019

நிலவைச் சுற்றத் தொடங்கியது சந்திராயன்-2

ISRO Chandrayaan 2 Mission: இதன் மூலம் நிலவின் பரப்பில் இருந்து குறைந்த பட்சம் 118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 18,078 கி. மீ. தொலைவையும் கொண்ட நீள் வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வருகிறது.

நிலவைச் சுற்றத் தொடங்கியது சந்திராயன்-2

சந்திராயன்-2 செயற்கைக்கோள் நிலவின் வட்டப்பாதையை சுற்றத் தொடங்கியது.

Bengaluru:

Chandrayaan 2: புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயன்-2 செயற்கைக்கோள் நிலவின் வட்டப்பாதையை சுற்றத் தொடங்கியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது. 

அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது. அதன்பின்னர் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. 

இவ்வாறு சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ம் நாள் அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது. 

நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை திரவ என்ஜின் இயக்கப்பட உள்ளது. இது மிக முக்கிய தருணமாகும் என்றார்.

இந்நிலையில், புவி வட்ட பாதையை விட்டு வெளியேறியுள்ள சந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் முதல் வட்டப்பாதையை அடைந்தது. இதன் மூலம் நிலவின் பரப்பில் இருந்து குறைந்த பட்சம் 118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 18,078 கி. மீ. தொலைவையும் கொண்ட நீள் வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வருகிறது. 

அதன் பின்னர், திரவ எரிவாயு இயந்திரம் மூலம் விண்கலத்தின் வேகம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு அதன் சுற்றுப் பாதை மாற்றப்படும். அப்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ தொலைவில் விண்கலம் சுற்றும். செப்டம்பர் 2-ம் தேதி நிலவில் இருந்து 100 கிமீ உயரத்தில் விண்கலம் இருக்கும்போது, அதிலிருந்து லேண்டர் கருவி தனியே பிரிந்து நிலவை நோக்கிச் செல்லும். 

பின்னர் அதன் வேகம் படிபடியாக குறைக்கப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிரங்கும்.

.