தூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம் அமைப்பதற்கான நில கையகப்படுத்தும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கிறார் சிவன்.
New Delhi: சந்திரயான் 3 (Chandrayaan 3), வரும் 2021 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் கே.சிவன், செய்தியாளர்கள் மத்தியில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் இது குறித்துப் பேசுகையில், “அரசு, Chandrayaan 3 திட்டத்திற்கான ஒப்புதலை அளித்துவிட்டது. Chandrayaan 2-ஐ மையப்படுத்திதான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது அந்த பணிகள் சீராக நடந்து வருகின்றன,” என்று கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் மட்டும் இஸ்ரோ, 25 மிஷன்களை செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக சிவன் கூறுகிறார்.
Chandrayaan 2 திட்டம் எதிர்பார்த்த முழு வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதன் ஆர்பிட்டர் திட்டமிட்டப்படி நிலவின் வட்டப் பாதையில் நிறை நிறுத்தப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்கு நிலவைப் பற்றிய புதிய தகவல்களை அனுப்ப உள்ளது அந்த ஆர்பிட்டர். சுமார் 140 மில்லியன் டாலர் செலவைக் கொண்டே Chandrayaan 2 திட்டம் நிறைவேற்றப்பட்டதுதான், அது உலக அளவில் பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
“Chandrayaan 2-வில் நமக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்தது. லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும், ஆர்பிட்டர் நன்றாக செயலாற்றி வருகிறது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது சிறப்பாக செயல்படும்,” என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கூறினார் கே.சிவன்.
தூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம் அமைப்பதற்கான நில கையகப்படுத்தும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கும் சிவன், “2019 ஆம் ஆண்டு இஸ்ரோவின் திட்டம் என்பது விரிவாக்கம் செய்வதில் இருந்தது. அதைத் தொடர்ந்து பணி நேர்த்தியை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூன்றாவதாக, பணிச் சுமையைக் குறைக்க முயன்றோம். ககன்யான் அறிவுரைக் குழுவையும் நாங்கள் நியமித்துள்ளோம்,” என்றார்.
கடந்த ஆண்டு, ஜூலை மாதம், Chandrayaan 2 விண்ணில் செலுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முயற்சி மேற்கொண்டது இஸ்ரோ. அப்போதுதான் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
நிலவில் லேண்டரை இறக்குவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. இதுவரை 38 முறை உலக நாடுகள், நிலவில் தங்களது லேண்டரை தரையிறக்க முயன்றுள்ளன. அதில் பாதிதான் வெற்றியைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இஸ்ரேல் கூட அதைப் போன்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டு தோல்விகண்டது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் மட்டும்தான் நிலவில் வெற்றிகரமாக லேண்டரை தரையிறக்கியுள்ளன.