This Article is From Sep 13, 2019

Cinema ticket: ஆன்லைன் சினிமா டிக்கெட் முன்பதிவு முறையில் அதிரடி மாற்றம்! - கடம்பூர் ராஜூ

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்கும் நடைமுறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Cinema ticket: ஆன்லைன் சினிமா டிக்கெட் முன்பதிவு முறையில் அதிரடி மாற்றம்! - கடம்பூர் ராஜூ

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்கும் நடைமுறை - கடம்பூர் ராஜூ அறிவிப்பு

ஆன்லைன் சினிமா டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அதிரடியாக அறிவித்தார். 

திரையரங்குக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது, திரையரங்கில் பார்க்கிங் கட்டணம் வரைமுறைப்படுத்தப்படுவது, சினிமா டிக்கெட்டுகளை முழுவதுமாக ஆன்லைனிலேயே விற்பது, நடிகர்களின் சம்பளங்களை முறைப்படுத்தும் முயற்சி உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை செய்தி மற்றும் தகவல் தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர்ராஜூ தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் அண்மையில், சினிமா டிக்கெட் கட்டணங்களை முறைப்படுத்தி அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. மல்டி பிளக்ஸ் மற்றும் குளிர்சாதன திரையரங்குகளுக்கும் குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளுக்கும் தனி தனி கட்டணங்கள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுபோல் ஆன்லைன் மூலம் டிக்கெட் கட்டணங்களை வெளிப்படையாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி வந்தது.

இதனிடையே தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஒரு நாளில் எத்தனை காட்சிகளில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளன என்பதை கண்காணிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். 

மேலும், ஆன்-லைன் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் என்றும், இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழ் சினிமா வரலாற்றில் இந்த திட்டம் ஒரு மைல்கல் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆன்லைனில் எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்கும் நடைமுறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

.