This Article is From Aug 27, 2018

கேரள பள்ளிகளின் நிலை: வெள்ள நீர் வடிந்த பின்னரும் வடியாத சோகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்குச் செல்பவர்கள், அங்கு இருக்கும் நிலையைப் பார்த்து வாயடைத்துப் போயுள்ளனர்

கேரள பள்ளிகளின் நிலை: வெள்ள நீர் வடிந்த பின்னரும் வடியாத சோகம்
Kochi:

கேரள கனமழை நின்றுள்ள நிலையில், நிவாரணப் பணிகள் அங்கு முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ராணுவப் படை, துணை ராணுவப் படை என்று பெரும் அளவிலானோர் தொடர்ந்து வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வது, மீண்டும் அடிப்படை வசதிகளை செய்து தருவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்குச் செல்பவர்கள், அங்கு இருக்கும் நிலையைப் பார்த்து வாயடைத்துப் போயுள்ளனர்.

வண்டல் மண்ணால் புத்தகங்கள் பழுது, ஃபர்னிச்சர்கள் சேதாரம், பிஞ்சுக் குழந்தைகளின் பள்ளி சார்ந்த வேலைகள் நாசம், உள்ளிட்ட சம்பவங்கள் பள்ளிகளுக்கு சுத்தம் செய்யுப் போகும் நபர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

‘இது மிகப் பெரும் வேதனையைத் தருகிறது’ என்று பரவூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சஜாய் ஜார்ஜ் பொங்குகிறார்.

ஜார்ஜ் தான், சர்வ சிக்‌ஷ அபியான் திட்டத்துக்கான எர்ணாகுளம் மாவட்ட அதிகாரி. அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் இந்த வெள்ளத்தால் அனைத்தையுமே இழந்துவிட்டோம். டிஜிட்டல் வகுப்பறை, நூலகம், மாணவர்களின் வேலைப்பாடுகள் என எல்லாம்’ என்றுள்ளார்.

எர்ணாகுளத்தின் வடக்கு பரவூர் மற்றும் ஆலுவா ஆகிய பகுதிகளில் இருக்கும் 117 பள்ளிகள் தான் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓணம் பண்டிகை முடிந்து வரும் 29 ஆம் தேதி குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர், பள்ளிகளில் இருக்கும் அனைத்து சேதாரங்களையும் சரி செய்து விட வேண்டும் என்று ஒரு பெரும் திரளான மக்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். 

ஆகஸ்ட் 8 முதல் பெய்த கனமழையால், இதுவரை 302 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.