சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது.
ஹைலைட்ஸ்
- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யும் விசாரணை நடத்துகிறது
- சிபிஐ கடந்த ஆண்டு சிதம்பரத்தைக் கைது செய்தது
- 3 மாத சிறைவாசத்திற்குப் பின்னர் டிசம்பரில் விடுதலையானார் சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்பி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக உள்வட்டாரத் தகவல் வந்துள்ளது. தற்போது மின்னணு முறையில் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளதாகவும், மீண்டும் நீதிமன்றங்கள் சாதாரணமாக இயங்க ஆரம்பித்த பின்னர் ஹார்டு-காப்பி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு முதலீடுகள் வந்ததில் சிதம்பரம் உள்ளிட்ட சிலர் 10 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டியது சிபிஐ.
கடந்த 2007 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
உதவி செய்த கார்த்தி சிதம்பரத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் உள்ளது. அதை வைத்து சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளில் சொத்துகள் வாங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தைக் கைது செய்தது சிபிஐ.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத் துறையும் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சிதம்பரத்தைக் கைது செய்து விசாரணை நடத்தியது.
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் டெல்லியின் திகார் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு கடந்த டிசம்பரில் பிணை கொடுக்கப்பட்டது.