உலகம் இருக்கும் வரை சினிமா இருக்கும். சினிமா இருக்கும் வரை சாப்லின் இருப்பார்.
சினிமாவைப் பொறுத்தவரை மக்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியாது; என் கலை வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டது இதைத்தான் - சார்லி சாப்லின்
சினிமா மாமேதை சார்லி சாப்லின் சொன்ன இந்த வாசகத்தில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளது. ஊடகத் துறையில் `அஜெண்டா செட்டிங்' (Agenda Setting) என்கின்ற சொற்பதம் முன்வைக்கப்படும். இது ஒரு தியரி. இந்த தியரியின்படி, மக்கள் எதைப் பேச வேண்டும், எதை சிந்திக்க வேண்டும், எதைத் தெரிந்துகொள்ள வேண்டும், என்பதை வெகுஜன ஊடகங்களே முடிவு செய்கின்றன என்பதுதான் இதன் மூலம். இதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும். மிகப் பிரபலமான நாளிதழோ, செய்திச் சேனலோ வெளியிடும் செய்தியைத் தான் பெரும்பான்மை மக்கள் பார்ப்பர். உண்மையா, இல்லையா என்பதைத் தவிர்த்து அந்தச் செய்தியில் என்ன சொல்லப்படுகிறதோ அதுவே பேசு பொருளாக மாறும். இதைத்தான் சார்லி சாப்லின், `மக்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியாது' என்கிறார்.
அவரின் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களில் ஒன்றான, `சிட்டி லைட்ஸ்' (City lights) அவரின் மேன்மைக்கு ஓர் சான்று. கிட்டத்தட்ட சாப்லினின் அனைத்துப் படங்களுமே சினிமா ரசிகர்களுக்குப் பொக்கிஷம்தான். ஆனால், இது சாப்லினின் பெஸ்ட். காரணம் அதன் க்ளைமாக்ஸ்.
பார்வையற்றத் தனது காதலிக்கு எப்படி சிகிச்சைப் பணம் கொடுப்பது என்று செய்வதறியாது தவிக்கிறான் அந்த சாமனியன். வசதிபெற்ற நண்பன் அந்த சாமனியனுக்கு வேண்டிய பணத்தைக் கொடுக்கிறான். அதை காதலியிடம் கொடுத்து, `இதுவரை நான் மட்டுமே உன்னைப் பார்த்தேன். இனி நீயும் என்னைப் பார்ப்பாய்' என்று சிகிச்சைக்கு வழியனுப்பி வைக்கிறான் சாமனியன். போதையில் இருந்தபோது பணத்தைக் கொடுக்கும் நண்பன், போதை தெளிந்தவுடன், `என்னிடமிருந்து பணத்தை அவன் திருடிச் சென்றுவிட்டான்' என்று போலீஸிடம் முறையிடுகிறான். அந்த சாமனியன் கைது செய்யப்படுகிறான்.
சில ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்படும் சாமனியன் வந்து சேரும் இடம் தன் காதலியை முதன்முதலாக பார்த்த தெரு. இப்போதும் அவளை அங்கே பார்க்கிறான். அவள் இன்னும் அழகாக, இன்னும் அன்பு கொப்பளிக்கும் புன்னகையுடன் இருக்கிறாள். பார்வை பெற்ற அவளுக்கு, இவன்தான் நம் காதலன் என்று தெரியவில்லை. அவனை ஒரு கோமாளி என்று பார்த்து சிரிக்கிறாள். மனமுடையும் காதலன், `எங்கிருந்தாலும் வாழ்க…' என்பதைப் பார்வை வழியே சொல்லி நகர்கிறான். அப்போது, அந்தக் காதலி அவன் கைகளை ஏதேச்சையாக தொட நேர்கிறது. அந்த கணத்தில் அவள் முகத்தில் இருக்கும் கேலிப் புன்னகை மறைகிறது. நம் காதலனைத்தான் எல்லோரையும் போல எள்ளி நகையாடினோமா என்று பதபதைக்கிறாள். அவனைப் பார்த்து, தலையை மட்டும் அசைத்து, `நீ தானே' என்று சைகையால் கேட்கிறாள். அவனும் எதுவும் பேசாமல் கண்ணீர் கசிய, `ஆம்' என்று தலையாட்டுகிறான். படம் முடிகிறது. அந்த 10 நிமிட க்ளைமாக்ஸ் மேஜிக்கிலிருந்து நம்மால் மீண்டு வருவதற்கு முன்னரே படத்தின் டைட்டில் கார்டு முடிகிறது.
உண்மையில் ஒரு சராசரி மசாலா படமென்றால், இருவரும் கட்டியணைத்து, முத்தங்கள் பரிமாறி, கண்ணீர் மல்க எதாவது வசனங்கள் பேசி கொன்றெடுத்து இருப்பார்கள். ஆனால், சிட்டி லைட்ஸ் சராசரி படம் அல்ல. சாப்லின் சராசரி கலைஞன் அல்ல. சினிமா என்றால் என்ன என்பதற்கான இலக்கணம் எழுதிய வெகு சிலரில் அவரும் ஒருவர். இன்றும் அவரின் முக்கியப் படங்களிலிருந்து காட்சிகள் உலகத்தின் ஏதோ ஒரு மூளையில் திரையிடப்பட்டுக் கொண்டே உள்ளன. அவரின் படங்களை சினிமா சார்ந்து படிக்கும் ஆய்வு மாணவர்கள், அதை கட்டுடைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். சராசரி சினிமா ரசிகன் சலிப்பில்லாமல் அவரின் படங்களை பார்த்துத் தீர்த்து வருகிறான். மவுனப் படங்கள் மூலம் புரட்சி ஏற்படுத்திய சாப்லினின் படங்கள்தான் இன்றும் சினிமா வகுப்புகளில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
அவர் படங்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்னவென்று அவரே சொல்கிறார். `மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு, பிறகு அதற்கு முரணான ஒன்றைச் செய்வது மிகப் பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்று' என்று சாப்லின் ஒரு முறை சொல்லி இருக்கிறார். இதுதான் அவர் எடுத்தப் படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம். ஏனென்றால் அவர் சினிமாவை எடுக்கவில்லை. உருவாக்கினார். மற்றவர்கள் போட்ட சாலையில் பயணிக்காமல், புது பாதையைக் கண்டடைந்தார். மக்களை தன்பால் சுண்டி இழுத்தார். அந்தப் பாதையில் பயணிக்க நினைத்தவர்கள் பலர். அதில் பயணப்பட முயன்று தடுக்கி விழுந்தவர்கள் பலர். உலகம் இருக்கும் வரை சினிமா இருக்கும். சினிமா இருக்கும் வரை சாப்லின் இருப்பார்.