தென்னாப்பிரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வருகை!
Chennai: தென்னாப்பிரிக்காவில் புற்றுநோயால் உயிருக்கு போராடி வந்த வங்கி மேலாளர் ஒருவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். அவரது சொந்த ஊரில் சிகிச்சையை தொடரும் வகையிலும், அவரது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக சென்ற மீட்பு விமானத்தில், வங்கி மேலாளருடன், ஒரு மருத்துவர், துணை மருத்துவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 30 மணி நேரத்தில் 21,000 கி.மீ தொலைவை கடந்து, நேற்றைய தினம் அந்த விமானம் சென்னை வந்ததடைந்தது.
பேங்க் ஆப் பரோடா வங்கியின் தலைமை மேலாளரான அவர், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது ஏர் ஆம்புலன்ஸூக்கான செலவை வங்கியே ஏற்றுக்கொண்டது. அவரை சென்னைக்கு அழைத்து வரும் பொறுப்பை ஐசிஏடிடி நிறுவனம் ஏற்றது.
இதுதொடர்பாக ஐசிஏடிடி லியர்ஜெட் ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் முகேஷ் கூறும்போது, இந்த முழு நடவடிக்கை ஒரு பெரும் சவாலானது. ஏனெனில் எங்களது குழு 30 மணி நேரத்தில் 21,000 கி.மீ தூரத்தை கடக்க வேண்டும்.
நடுவே சுமார் 4,000 கி.மீ தூரத்திற்கு எங்குமே விமானத்தை தரையிறக்க முடியாத அளவிலான பாதையை கடக்க வேண்டும். அது ஒரு வகையில் ஆபத்தானது. எனினும், அவர்கள் அதனை செய்தார்கள்.. நாங்கள் செய்தோம் என்று அவர் கூறினார்.
இந்த பயணத்தின் போது, அந்த விமானம் மாலத்தீவு, சீஷல்ஸ், மொரிசீயஸ் மற்றும் மடகாஸ்கர் உள்ளிட்ட நாடுகளில் நிறுத்தி சென்றது.
அவர்கள் திரும்பி வரும்போது, மொரிசீயஸில் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி பெற்று, அங்கு ஓய்வெடுத்துவிட்டு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச்.25ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் முடங்கியுள்ளது.