Chennai: இன்று காலை 10 மணிக்கு, 172 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், பறவையின் மீது மோதியதால், விமானத்தின் ரேடார் சேதமடைந்த்துள்ளது.
“தரையில் இருந்து 400 அடி உயரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக விமானம் தரை இறக்கப்பட்டது. ரேடார் சேதமடைந்துள்ளதால், பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று சென்னை விமானநிலைய இயக்குனர் சந்திரமெளலி தெரிவித்துள்ளார்.
பாதுக்காப்பாக விமானம் தரை இறக்கப்பட்டதால், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், விமானத்தின் சேதமடைந்த பகுதிகள் பழுது பார்க்கப்பட்டு வருவதால், சென்னையில் இருந்து சிங்கப்பூர் திரும்பி செல்ல வேண்டிய அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தைச் சுற்றி இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொது வெளியில் குப்பைகள் வெளியேற்றப்படுகின்றன. இதனால், விமான நிலைய பகுதிகளை பறவைகள் சுற்றி வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “மேற்கத்திய நாடுகளில் பறவைகளுக்கு பயிற்சி அளித்து மற்ற பறவைகளை விரட்டுவது போன்ற முறையை இங்கும் பின்பற்றலாம். இதன் மூலம் பறவைகள் விபத்தில் சிக்குவதை தடுக்க முடியும். ஃபால்கான் எனப்படும் ராஜாளிப் பறவைகளுக்குப் பயிற்சியளித்து மற்ற பறவைகளை விமான நிலைய பகுதிக்குள் வராமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று சந்திரமெளலி தெரிவித்தார்.