குற்றவாளிகள் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டைனையை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
இதன்படி குற்றவாளிகள் 16 பேரில் ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழினி ஆகியோருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது என்று நீதிபதி மஞ்சுளா தனது தீர்ப்பில் குறிப்ட்டுள்ளார்.
மீதமுள்ளவர்களில் ராஜசேகர் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன் உள்ளிட்டேர் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
இதுதொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 2018 டிசம்பர் 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் குறுக்கு விசாரணை தொடங்கப்பட்டது. அதில், அரசு தரப்பு சாட்சியாக 36 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 120 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டது. இதை வைத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 11 மாதங்களாக நடந்து வந்தது.
இந்தநிலையில், வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை, இருதரப்பு வாதங்கள் என அனைத்தும் கடந்த டிசம்பர் 6ம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து 17 பேரில் ஒருவர் உயிரிழந்து விட்டதால், 16 பேர் மீது நேற்று முன்தினம் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்கினார்.
அதில், 16 பேரில் 15 பேர் குற்றவாளி எனவும், குடியிருப்பில் தோட்டக்காரராக வேலை செய்து வந்த குணசோகரன் என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குற்றவாளிகள் 15 பேருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.