ஹைலைட்ஸ்
- கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம்பேர் அதிகம் வந்துள்ளனர்.
- 25 லட்சம் புத்தகங்கள் இந்தாண்டு கூடுதலாக விற்பனையாகியுள்ளது
- சுமார் 21 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளன.
சென்னை புத்தக காட்சியில் கடந்த ஆண்டை விட ரூ. 6 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இந்த தகவலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டுக்கான சென்னை புத்தக காட்சி கடந்த 4-ம்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 17 நாட்கள் புத்தக காட்சி நடைபெற்றது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
புத்தக காட்சிக்கு வெளியே மேடை அமைக்கப்பட்டு அறிஞர்களின் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த புத்தக காட்சியில் ரூ. 21 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது என்று பபாசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 6 கோடி அதிகம்.
சுமார் 75 லட்சம் புத்தகங்கள் தற்போது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 50 லட்சம் புத்தகங்கள் விற்பனையானது. வாசகர்களை பொருத்தவரையில் 15 லட்சம்பேர் இங்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4 லட்சம் அதிகம். குறிப்பாக குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் வந்ததாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.