'முககவசம் அணியாமல் நடந்து வந்தால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும்'
ஹைலைட்ஸ்
- தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
- சென்னையில் 8,795 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது
- இதுவரை சென்னையில் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், சென்னை மாநகர போலீஸ் ஏ.கே.விஸ்வநாதன் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 567 பேர். ஒட்டுமொத்த அளவில் 13,967 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 400 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 6,282 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,588 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 94 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
மே 22 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 8,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,062 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 64 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 5,624 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், திரு.வி.க நகர் மண்டலத்திலும் முறையே 1,231 மற்றும் 1,032 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைவாக 96 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இப்படி தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், ‘இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல, முககவசம் அணியாமல் நடந்து வந்தால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும்,' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.