This Article is From Dec 11, 2018

கட்டாய உடற்பயிற்சியால் மாணவி பலியா..!?- தாம்பரம் தனியார் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்

இவர் நேற்று மாலை கட்டாய விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டதால் உயிரிழந்துவிட்டதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின

கட்டாய உடற்பயிற்சியால் மாணவி பலியா..!?- தாம்பரம் தனியார் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்

தாம்பரத்தில் அமைந்திருக்கும், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு வேதியல் பயின்று வரும் மாணவி மஹிமா. இவர் நேற்று மாலை கட்டாய விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டதால் உயிரிழந்துவிட்டதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.

அதை தொடர்ந்து அக்கல்லூரியில் பயிலும் சுமார் 2000-க்கும் அதிகமான மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“ஒவ்வொரு திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் நடத்தப்படும் இந்த கட்டாய விளையாட்டு பயிற்சியில் பங்கு பெற வேண்டும் என்பது எங்கள் கல்லூரியில் கட்டாயம், அவ்வாறு பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால் தேர்வுகளில் மதிப்பெண் குறைக்கப்படுகிறது” என்னும் அதிர்ச்சித் தகவலை கல்லூரி மாணவர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்தார்.

இதனால் மாணவர்கள் வேறு வழியன்றி இதுபோன்ற பயிற்சிகளில் பங்கேற்று வருவதாகவும் சக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து மறைந்த மாணவி மஹிமாவின் தந்தை லூயஸ் தேவராஜ் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

“விளையாட்டு பயிற்சி என்பதெல்லாம் சரிதான். ஆனால், அதை ஏன் கட்டாயமாக்க வேண்டும்” என அக்கலூரியில் பயிலும் இன்னொரு மாணவி கேட்கிறார்.

பிரச்னை மேலும் பெரிதாகமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், அக்கல்லூரிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தை குறித்து கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயன்றோம் ஆனால் அவர்கள் பதில் அளிக்கவில்லை.
 

.