This Article is From Feb 15, 2020

சென்னையில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விடிய விடிய போராட்டம்!

போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விடிய விடிய போராட்டம்!

இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விடிய விடிய தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதனை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதோடு கண்மூடித்தனமான தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் உடனடியாக வைரலாக பரவியது. சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் டெல்லியில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டது போல், சென்னையிலும் நடந்த இந்த சம்பவம் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து ஒரு சில மணி நேரங்களில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இவ்விவகாரம் மேலும் பெரிதாவதை தடுக்க வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்களின் போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது.

ஒரு தரப்பினர் வண்ணாரப்பேட்டை மற்றும் பிராட்வேயில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2வது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

.