This Article is From Apr 29, 2020

சென்னை உட்பட 3 மாநகராட்சியில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!

. 4 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு முடிவடைவதால் மீண்டும் பொதுமக்கள் பொருட்களை வாங்க அலைமோதலாம் என்பதால், நாளை மேற்கண்ட மாநகராட்சிகளில் என்ன நிலை என்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

சென்னை உட்பட 3 மாநகராட்சியில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!

சென்னை உட்பட 3 மாநகராட்சியில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!

ஹைலைட்ஸ்

  • நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!
  • சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நேற்று இரவுடன் முடிவு
  • 3 மாநகராட்சியில் இன்று இரவுடன் ஊரடங்கு நிறைவடைகிறது

சென்னை உட்பட 3 மாநகராட்சியில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும் என்றும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 28.4.2020 இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. 

தொடர்ந்து, இந்த முழு ஊரடங்கின் போது, மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நேற்று இரவுடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், 3 மாநகராட்சியில் இன்று இரவுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. 4 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு முடிவடைவதால் மீண்டும் பொதுமக்கள் பொருட்களை வாங்க அலைமோதலாம் என்பதால், நாளை மேற்கண்ட மாநகராட்சிகளில் என்ன நிலை என்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இது தொட்ர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.

எனினும், நாளை மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

மே 1ம் தேதி முதல் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்த் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை காத்து, சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அவர் அறிவித்துள்ளார்.
 

.