ஆளும் அதிமுக அரசு மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தபோது அதற்கு நாடாளுன்றத்தில் ஆதரவு தெரிவித்திருந்தது.
Chennai: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடந்து வரும் நிலையில், போராட்டக் களத்தில் திருமணம் ஒன்று இன்று நடைபெற்றது. இதில் 20 வயதான மணமகள் சுமையாவை, 22 வயதான மணமகன் ஷாஹின் ஷா கரம் பிடித்துள்ளார்.
வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டு போராட்டம் நடந்து வருகிறது. இங்குத் தடியடி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல்துறையைக் கண்டித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை போராட்டக் களம் மணமேடையாக இன்று மாறியது. மணமக்கள் ஷாஹின் ஷா - சுமையாவை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாழ்த்தினர்.
இதன்பின்னர் NDTVக்கு அளித்த பேட்டியில் மணமகன் ஷாஹின் ஷா, 'குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டம் முஸ்லிம்களை மட்டுமல்லாமல் பலரையும் பாதிக்கும். எனக்குத் திருமணம் முன்னரே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு இந்த போராட்டக் களத்தை விட்டுச் செல்ல மனமில்லை. திருமண மண்டபத்தில் நான் கல்யாணம் செய்திருந்தேன் என்றால் அங்கு நூற்றுக்கணக்கானோர் மட்டுமே வந்திருப்பார்கள். இங்கு ஆயிரக்கணக்கானோர் வந்து எங்களை வாழ்த்தியுள்ளனர். இதனைப் பெருமையாகக் கருதுகிறேன். ' என்று கூறினார்.
போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'மணமக்கள் இருவரும் போராட்டத்தில் ஆர்வமாக இருந்தார்கள். அவர்களது திருமணம் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. போராட்டத்தில் அவர்கள் காட்டிய ஆர்வம் காரணமாகத் திருமணத்திற்கு இங்கு அனுமதி அளித்தோம். இதேபோன்று மற்றவர்களும், இங்குத் திருமணம் முடித்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அவர்களது கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை' என்றனர்.
நேற்று முன்தினம் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களைத் தமிழக அமைச்சரும், ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெயக்குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டக்காரர்களின் கோரிக்கை முதல்வருடன் ஆலோசனை நடத்துவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆளும் அதிமுக அரசு மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அதற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்திருந்தது.
வண்ணாரப்பேட்டையில் நடந்துவரும் போராட்டத்தைக் கலைக்க காவல்துறை தடியடி நடத்தினர். இதில் மணமகன் ஷாஹின் ஷாவும் காயம் அடைந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
காவல்துறை நடத்திய தடியடிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், அமைதியான முறையில் நடந்த போராட்டத்திற்கு எதிராகத் தேவையில்லாமல் தடியடி பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வரும் முஸ்லிம்கள் அல்லாதோருக்குக் குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமை வழங்குகிறது. இதில் தங்களுக்குப் பாகுபாடு காண்பிக்கப்படுவதாகக் கூறி முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.