சாலையில் மக்கள் பயன்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விதிமுறைகளை மீறி சாலையோரங்களில், மக்கள் நடமாட்டத்திற்கு இடையூறு செய்யும் விதமாக பேனர்கள் வைக்கப்படுவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில் பேனர்களை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், அரசுப்பணியை ராஜினாமா செய்து விட்டு தனக்கு விருப்பமான கட்சியில் இணைந்து கொள்ளுமாறு காட்டமான பதிலை அளித்தனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களுக்கு இடையறு அளிக்கும் வகையில் சாலையில் பேனர்கள் வைக்க தமிழகம் முழுவதும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பல்வேறு விவாதங்களை கிளப்பி வருகிறது.