This Article is From Jul 15, 2020

மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகம் முழுவதும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்து வந்துள்ளதாக பயனாளர்கள் கடுமையாக குற்றம்சாட்டு எழுந்தது.

மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

ஹைலைட்ஸ்

  • மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
  • மின்கட்டணம் கடுமையாக உயர்ந்து வந்துள்ளதாக பயனாளர்கள் குற்றச்சாட்டு
  • தமிழக அரசின் வாதத்தை ஏற்று வழக்கு தள்ளுபடி

ஊரடங்கு காலத்தில் மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மார்ச், ஏப்ரல் மாத மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யமுடியாமல் போனது, இதனால், மின்சார பயனாளர்கள் பிப்ரவரி மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தலாம் என்றும் பின்னர் மின் கணக்கீடு செய்யும் போது, மொத்தமாக இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டு, முன்பு கட்டிய கட்டணத்தை கழித்து மீத தொகையை செலுத்த வேண்டும் என அரசு அறிவித்தது. 

அதன் அடிப்படையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அனைத்து நுகர்வோரும் மின் கட்டணத்தை செலுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது, மார்ச். ஏப்ரல், மே, ஜூன் உள்ளிட்ட 4 மாதங்களுக்கும் மொத்தமாக கணக்கீடு செய்து மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்து வந்துள்ளதாக பயனாளர்கள் கடுமையாக குற்றம்சாட்டு எழுந்தது. ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதாவது இந்த மின் கணக்கீடு என்பது தவறு, இதனால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அவர் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும், 4 மாதத்திற்கு மொத்தமாக கட்டணம் வசூல் செய்யப்பட்டால் கட்டண விகிதம் பலமடங்காக அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்த வழக்கின் விசாரணையின் போது, அதிக மின் கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது

மேலும், புதிதாக மின் கணக்கீடு செய்யப்படும்போது ஏற்கெனவே செலுத்திய தொகையை கழித்துக்கொண்டு புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலோ, தவறோ இல்லை என தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அதில், விதிகளை பின்பற்றியே மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என தமிழக அரசின் வாதத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

.