This Article is From Jul 05, 2019

மகளின் திருமணத்திற்காக நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!

ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் நளினி, தனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

மகளின் திருமணத்திற்காக நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது தரப்பு நியாயங்களை நளினி எடுத்துரைத்தார்.

மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாத பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் நளினி. 

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகள் ஹரித்ரா இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து வைப்பதற்காக தனக்கு 6 மாதங்கள் பரோல் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை நளி தாக்கல் செய்திருந்தார். 

27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தனக்கு 6 மாத பரோல் வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக நேரில் ஆஜராகி வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதேபோன்று காணொலி காட்சி மூலம் தனது தரப்பு நியாயத்தை தெரிவிக்க விரும்பவில்லை என்றும், நேரில் ஆஜராகி வாதாடவே விரும்புவதாகவும் நளினி கூறியிருந்தார். இதையடுத்து இன்றைக்கு மதியம் நளினியை ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இதன்படி இன்று மதியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர் ஆனார். நீதிமன்றத்தில் அவர், தானும் தனது கணவரும் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறோம். சிறையில்தான் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. வீட்டில் உள்ளவர்கள்தான் மகளை வளர்த்தனர். இப்போது மகளுக்கு திருணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எனவே தனக்கு 6 மாத பரோல் வழங்க வேண்டும். இதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்றார். 

இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் நடராஜன், 6 மாதம் பரோல் வழங்குவது சாத்தியம் இல்லை என்றும், ஒரு மாதம் வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

.