Chennai Rain Update- மிகவும் அரிதான வெப்பச்சலன மழை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் பெய்யும்
Chennai Rain Update- வடகிழக்கு பருவமழை (NEM) ஆரம்பித்ததில் இருந்து சென்னை (Chennai), காஞ்சிபுரம் (Kancheepuram) மற்றும் திருவள்ளூர் (Thiruvallur) மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று பகலில் இந்த மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இருந்தது. இப்படிபட்ட சூழலில், மழை மீண்டும் கம்-பேக் கொடுக்க உள்ளதாக பிரபல வானிலை கணிப்பாளர், ‘தமிழ்நாடு வெதர்மேன்' (Tamilnadu Weatherman) பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது குறித்து வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில், “வடகிழக்கு பருவமழையில் இன்று வெப்பச்சலன மழை பெய்ய உள்ளது. மேற்கு பக்கத்தில் இருந்து நிலம் நோக்கி இன்று மேகக் கூட்டங்கள் நகர உள்ளன. இதன் மூலம் மிகவும் அரிதான வெப்பச்சலன மழை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் பெய்யும். இந்த மழையானது, இடியுடன் கூடிய பொழிவைக் கொண்டு வரும். நாளையும் இந்த நிலை தொடரும். இரவு ஆக ஆக அதிக மேகக் கூட்டங்கள் சேரும்,” என்று ஸ்பெஷல் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ‘மேற்கு மத்திய வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது சற்றே வலுவடைந்து இன்று ஆந்திர பிரதேச கடற்கரைக்கு அப்பால் மேற்கு மத்திய வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்' என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.