பொது மக்கள் பிற இடங்களுக்கு வாகனங்களில் செல்வது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
- சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
- மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்த வருவதனால், வரும் 19 ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின்போது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு முன்னரே விளக்கமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில், சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை, தனியார் வாகனங்களை அனுமதியின்றி வெளியே எடுத்தால் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெரிவித்துள்ளது.
காவல் துறை தரப்பு, ‘எவ்வித அனுமதிச் சீட்டுமின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான காவல் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துக் காவல் துறையினரால் எச்சரிக்கப்படுகிறது. அதேபோல் போலியான அனுமதிச் சீட்டுகளை வைத்து வாகனங்களை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 பிரிவின்படி கடுமையான காவல் துறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கி இருக்கும் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவி புரிவோர் மற்றும் அரசு, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படும். இவர்கள் அரசின் tnepass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது மக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். பொது மக்கள் பிற இடங்களுக்கு வாகனங்களில் செல்வது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது.
தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணி புரியும் நிறுவனத்திடமிருந்து உரிய அடையாள அட்டைகளைப் பெற்று வாகனங்களில் செல்லுதல் வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.