This Article is From Jun 10, 2019

எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட 45 குழந்தைகளுக்குத் ‘தந்தையான’ நபர்- ஓர் நெகிழ்ச்சிக் கதை!

எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 45 குழந்தைகளை அவர்கள் குடும்பத்தினரே கைவிட்ட போதும், தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ‘ஷெல்டர் ட்ரஸ்ட்’-ன் சாலமன் ராஜ்.

எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட 45 குழந்தைகளுக்குத் ‘தந்தையான’ நபர்- ஓர் நெகிழ்ச்சிக் கதை!

"இப்போது நான் 45 எச்.ஐ.வி பாதித்தக் குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கிறேன். அவர்கள் என்னை ‘அப்பா’ என்று பாசத்தோடு அழைக்கும்போது மனநிறைவடைகிறேன்”

Chennai:

எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 45 குழந்தைகளை அவர்கள் குடும்பத்தினரே கைவிட்ட போதும், தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ‘ஷெல்டர் ட்ரஸ்ட்'-ன் சாலமன் ராஜ். அவரை எச்.ஐ.வி பாதித்தக் குழந்தைகள் ‘அப்பா' என்றுதான் அழைக்கப்படுகிறார். 

“இப்படிப்பட்ட நல்ல செயல்தான் வாழ்க்கையில் எனக்குத் திருப்தியளிக்கிறது” என்று தனது பணி குறித்து நெகிழ்ச்சியடைகிறார் சாலமன். 

அவரது ஷெல்டரில் தேவைப்படுவோர் அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதி, கலைப் பயிற்சி, நடனப் பயிற்சி, திறன் வளர்ப்புப் பயிற்சி என அனைத்தும் கற்றுத் தரப்படுகிறது. 

எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலர் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். 7 பேர் இளங்கலைப் பட்டம் பயின்று வருகின்றனர். 

தனது பயணம் குறித்து விவரிக்க ஆரம்பித்த சாலமன், “எனக்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்தும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், எச்.ஐ.வி பாதித்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். 

எப்போது நான் ஒரு குழந்தையைத் தத்டெத்து வளர்க்கலாம் என்று நினைத்தேனோ, அப்போது எங்களுக்குக் குழந்தை பிறந்துவிட்டது. இதனால், தத்தெடுக்கும் யோசனையை சிறிது காலத்துக்குத் தள்ளிவைத்தேன். ஆனால், இது என் மனதில் பாரத்தை உண்டாக்கியது. ஆகவே, எச்.ஐ.வி பாதித்தக் குழந்தையைத் தத்தெடுத்தேன். அப்போதில் இருந்து தொடர்ந்து பல குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன்.

இப்போது நான் 45 எச்.ஐ.வி பாதித்தக் குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கிறேன். அவர்கள் என்னை ‘அப்பா' என்று பாசத்தோடு அழைக்கும்போது மனநிறைவடைகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் விளக்குகிறார். 

எச்.ஐ.வி பாதிக்கப்பட்டக் குழந்தைகளை வளர்ப்பதில் சிக்கல் இல்லாமல் இல்லை. அது குறித்து சாலமன் பேசுப்போது, “பல நிதிச் சிக்கல்களை சந்திக்கிறேன். அவர்களின் மருத்துவத்துக்கு சில நேரங்களில் அதிக செலவு பிடிக்கும். சில குழந்தைகளில் ஆரோக்கியமும்  கடுமையாக பாதிக்கப்படும்” என்று கூறுகிறார். 

சாலமன் அரவணைப்பில் வளரும் எச்.ஐ.வி பாதித்த சிறுமி ஒருவர், 11 ஆம் வகுப்புப் படித்து வருகிறார். அவர், “2016 ஆம் ஆண்டு நான் இங்கு வந்தேன். நான் மருத்துவர் ஆக வேண்டும். அப்படி மருத்துவராகி என்னைப் போன்றப் பலருக்கு உதவி செய்ய வேண்டும்” என்று தீர்க்கமாக கூறுகிறார். 
 

.