This Article is From Feb 13, 2019

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.10 லட்சம்பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில் கடந்த 10-ம் தேதியில் இருந்து இலவச பயணம் நடைமுறையில் இருந்து வருகிறது. 4-வது நாளான இன்றும் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.10 லட்சம்பேர் பயணம்

மக்கள் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயிலில் செல்லத் தொடங்கியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இன்று 4-வது நாளாக இலவச சேவையை தொடர்கிறது சென்னை மெட்ரோ ரயில்
  • 3 நாட்களில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம்
  • விழிப்புணர்வுக்காக இலவச பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் மட்டும் 2,10,792 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கடந்த 10-ம் தேதியில் இருந்து இலவச பயணம் நடைமுறையில் இருந்து வருகிறது. 4-வது நாளான இன்றும் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னையில் டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் கடந்த 10-ம்தேதி முதல் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து மக்கள் மத்தியில் மெட்ரோ ரயில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அன்றும், அதற்கு மறுநாளான 11-ம்தேதியும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 

இதனால் மக்கள் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த தொடங்கினர். சில வழித்தடங்களில் நிற்க இடமின்றி கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று 3-வதுநாளாக இலவச சேவை நீட்டிக்கப்பட்டது. 

இந்த 3 நாட்களில் கிடைத்த வரவேற்பை பார்த்த மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று 4-வது நாளும் இலவச ரயில் சேவையை நீட்டித்துள்ளது. இதையடுத்து, மக்கள் கூட்டம் கூட்டமாக மெட்ரோவில் இலவச பயணம் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் நேற்று மட்டும் மெட்ரோவில் 2,10,792 பேர் பயணம் செய்துள்ளனர். ஒரே நாளில் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை இதுவே அதிகம். இதைத் தவிர்த்து கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 4,12,348 பேர் மெட்ரோ ரயிலின் இலவச சேவையை பயன்படுத்தியுள்ளனர். 
 

.