கட்டணத்தில் சில மாற்றங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது
ஹைலைட்ஸ்
- சென்னை மெட்ரோவின் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக தொடங்கப்பட்டுள்ளது
- முதல்கட்டமாக மொத்தம் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேவை
- கட்டணத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன
சென்னை மெட்ரோவின் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மொத்தம் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பூருக்கு நேற்று வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையிலான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மெட்ரோ ரயிலின் முதல்கட்ட வழித்தடம் நிறைவு பெற்றுள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் இன்று நாள் முழுவதும் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகம் இருப்பதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கட்டணத்தில் சில மாற்றங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது. இன்று தொடங்கப்பட்ட டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரே ரயில் சேவைக்கு ரூ. 40 கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.