நகர மக்களின் துயர் துடைக்க, 900 டாங்கர் லாரிகள் மூலம் தினமும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையால் பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில், பல்வேறு இடங்களில் அத்தியாவசியத் தேவைக்குக் கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு தரப்பிலும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கிழிவு நீரகற்று வாரியமான சென்னை மெட்ரோ வாட்டர் அமைப்பு, ட்விட்டரில், தனது அதிகாரபூர்வ பக்கத்தை ஆரம்பித்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம், “வணக்கம் சென்னை மக்களே, உங்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவும், உங்கள் குறைகளை கேட்டறிந்து விரைவாக தீர்வு காணவும், எங்களது செயல்பாடுகளை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய தகவல்களுக்கு எங்களோடு இணைந்திருங்கள்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
தற்போது சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னைக்குப் பருவமழை பொய்த்ததைக் காரணமாக சொல்கிறது அரசு. இதனால் சென்னைக்குத் தேவையான நீரில் 40 சதவிகிதத்தை, அரசு குறைத்துள்ளது.
நகர மக்களின் துயர் துடைக்க, 900 டாங்கர் லாரிகள் மூலம் தினமும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் மூலம் குடும்பம் ஒன்றுக்கு 5 குடுங்கள் நீர் மட்டுமே கிடைப்பதாக மக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். தனியார் லாரி உரிமையாளர்கள், தண்ணீர் சப்ளைக்கான கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளனர். தண்ணீர்ப் பிரச்னையை சரியாக சமாளிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம், சமீபத்தில் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது.