This Article is From Oct 16, 2018

அஞ்சல் பெட்டிகளில் குவியும் பர்ஸுகள்… சென்னை பிக் பாக்கெட்டுகளின் புதிய யுக்தி!

சென்னையில் இருக்கும் அஞ்சல் பெட்டிகளில் பலவற்றில் தினம் தினம் நிறைய பர்ஸுகள் குவிந்து வருகின்றன

அஞ்சல் பெட்டிகளில் குவியும் பர்ஸுகள்… சென்னை பிக் பாக்கெட்டுகளின் புதிய யுக்தி!

சமீப காலமாக சில பாஸ்போர்டுகள் கூட எங்களுக்குக் கிடைக்கின்றன, அஞ்சல் துறை

Chennai:

சென்னையில் இருக்கும் அஞ்சல் பெட்டிகளில் பலவற்றில் தினம் தினம் நிறைய பர்ஸுகள் குவிந்து வருகின்றன. பொது மக்களின் பர்ஸுகளை பிக் பாக்கெட் அடிக்கும் திருடர்கள், அதை அஞ்சல் பெட்டியில் போட்டுவிடுகின்றனர். குறிப்பாக அடையாள அட்டை இருக்கும் பர்ஸுகள் இதைப் போன்று அதிகம் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விசித்திர விவகாரம் குறித்து சென்னையைச் சேர்ந்த அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசும் போது, ‘கடந்த 6 மாதத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட பர்ஸுகள் அஞ்சல் பெட்டிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிக் பாக்கெட் திருடர்கள், பர்ஸிலிருந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, அதை அஞ்சல் பெட்டியில் போட்டு விடுகின்றனர். குறிப்பாக ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டைகள் இருக்கும் பர்ஸுகள், இந்த வகையில் எங்களுக்குக் கிடைக்கின்றன. இப்படிச் செய்வதன் மூலம் திருடர்கள், பிரச்னையிலிருந்து சுலபமாக தப்பித்து விடுகின்றனர். 

எங்களுக்கு இப்படி வரும் பர்ஸுகளை, மிகவும் சிரத்தை எடுத்து சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம். இந்த செயலால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றாலும், பொது மக்களுக்கு செய்யும் ஒரு சேவையாக அதை நினைத்துக் கொள்கிறோம். பர்ஸில் தொலைபேசி எண் எங்கேனும் இருந்தால், அதற்கு அழைத்தும் தகவல் தெரிவிப்போம். 

சமீப காலமாக சில பாஸ்போர்டுகள் கூட எங்களுக்குக் கிடைக்கின்றன. அதை பாஸ்போர்ட் அலுவலகத்துக்குக் கொடுத்து விடுகிறோம்’ என்று கூறியுள்ளார். 


 

.