குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதை தொடர்ந்து சென்னை பல்கலைக் கழகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். அப்போது மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடந்து வந்த நிலையில் இன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக்கு 23-ம்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த போலீசாரையும், குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
குடியுரிமை சட்டத்தை கண்டித்து டெல்லியின் கிழக்குப் பகுதியான சீலாம்பூரில் புதிதாக இன்று போராட்டங்கள் வெடித்தன. இதைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கண்ணிர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்புகாணப்பட்டது.
இதற்கிடையே போராட்டக்காரர்கள் பேருந்து, போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றின் மீது கற்களை வீசியதாக புகார்கள் எழுந்துள்ளன. இதேபோன்று டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்திலும்போராட்டம் தொடர்ந்தது.
நேற்று நடந்த போராட்டத்தின்போது ஜாமியா மில்லியா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. கற்கள் வீசப்பட்டதுடன், பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அனுமதியின்றி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த போலீசார் மாணவர்களை கைது செய்தனர். இதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.