This Article is From Aug 04, 2018

விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடி: அண்ணா பல்கலை பேராசிரியை உமா பணியிடை நீக்கம்

ஊழல் தடுப்பு & கண்காணிப்பு இயக்ககம் இருதினங்களுக்கு முன் பேராசிரியர் உமாவின் வீடு, அலுவலங்களில் சோதனை மேற்கொண்டதை அடுத்து பல்கலைக்கழகம் நடவடிக்கை

விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடி: அண்ணா பல்கலை பேராசிரியை உமா பணியிடை நீக்கம்
Chennai:

பணம் பெற்றுக்கொண்டு மதிப்பெண் வழங்கிய வழக்கில் சிக்கியுள்ள பேராசிரியர் உமாவினை அண்ணா பல்கலைக்கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

மறுமதீப்பீடு திட்டத்தின் பேரில் இலஞ்சம் பெற்றுக்கொண்டு மதிப்பெண்களை வாரி வழங்கியதாக உமா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராகப் பணிபுரிந்த காலத்தில் (2015-2018) மதிப்பெண் வழங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்ததாகத் தகவல் வந்தது. இதையடுத்து ஊழல் தடுப்பு & கண்காணிப்பு இயக்ககம் (DVAC) இருதினங்களுக்கு முன்பு இவரது வீட்டில் ரெய்டு மேற்கொண்டிருந்தது. இதனால் பல்கலைக்கழகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சூரப்பா இதுகுறித்துக் கூறுகையில் 'இவ்விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். இதில் மேலும் சிலருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கருதுகிறோம். போதுமான ஆதாரம் சிக்கியவுடன் அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். ஊழல் செய்பவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் இடமில்லை" என்றார்.

டிவிஏசி ஏற்கனவே கிரிமினல் சதித்திட்டம், மோசடி, ஆதாரங்களை அழித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் உமா முதலிய பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் இரண்டு உதவிப் பேராசிரியர்களும் அடங்குவர்.

மூத்த அதிகாரி ஒருவர், "உமா வீட்டில் இருந்து பல்வேறு சொத்துக்களின் ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளோம். இவை தவறான வழியில் வந்த பணத்தில் வாங்கப்பட்டிருக்கலாம். வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பில் இவர் ஈடுபட்டுள்ளதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனினும் இவ்வழக்கு சவாலானது" என்று கூறினார்.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு மதிப்பெண்கள் தாராளமாக வாரி வழங்கப்பட்டுள்ளன. இது செயல்பட்ட விதம், எவ்வளவு பணம் சம்பந்தப்பட்டுள்ளது என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் தவறான முறையில் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு முறைகேடாக வழங்கிய மதிப்பெண், அவர்கள் அடையாளம் காணப்பட்டால் ரத்து செய்யப்படும் என்றும் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது விளக்கத்தைப் பெற முயன்றபோது, தகவல் அறிவியல் & தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பேரா. GV உமாவைத் தொடர்புகொள்ள இயலவில்லை.

.