Chennai Rains - "சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பாரிமுனையில் 41 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது"
Chennai Rains - சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த திடீர் மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள அண்டை மாவட்டங்களில் பெரிதாக மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த திடீர் மழை குறித்து, பிரபல வானில வல்லுநர், தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman), பிரதீப் ஜான், “காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழையானது இன்று மற்றும் நாளையும் தொடரும். இன்னும் சொல்லப் போனால், அடுத்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ன் போதும் மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பாரிமுனையில் 41 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்ப்பேட்டையில் 39 மில்லி மீட்டர் மழையும், கத்திவாக்கத்தில் 38 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது,” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் மழை நிலவரம் குறித்துத் தெரிவிக்கையில், “மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யும்,” என்று மட்டும் கூறியுள்ளது.