Chennai Rains- “சென்னையில் ஜனவரி மாதம், பொதுவான மழை அளவு 26 மில்லி மீட்டர் மட்டும்தான்"
Chennai Rains- 2020 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று அதிகாலை முதல் சென்னை நகரில் மழை (Chennai rains) வெளுத்து வாங்கி வருகிறது. வரும் நாட்களிலும் இந்த மழை நீடிக்குமா என்பது குறித்து பிரபல வானிலை வல்லுநர், தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman), பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மழை குறித்து வெதர்மேன், “சென்னையில் ஜனவரி மாதம், பொதுவான மழை அளவு 26 மில்லி மீட்டர் மட்டும்தான். அதை முதல் நாளிலேயே பெற்றுவிட்டோம். கடைசியாக இதைப் போன்ற மழையை 2012 ஆம் ஆண்டு பெற்றது சென்னை. அப்போதும் இன்று பெய்தது போல திடீர் மழை கிடையாது.
இது இன்றோடு நிற்கப் போவதில்லை. நாளையும் அதிக மழை பெய்வது தொடரும். வரும் ஜனவரி 9 ஆம் தேதி வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டுதான் இருக்கும். அதேபோல ஜனவரி மாதம் கடைசி வாரத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருக்கழுங்குன்றத்தில் 48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து உத்தண்டியில் 43 மில்லி மீட்டரும் ஷெனாய் நகரில் 42 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரத்தில் 10 மில்லி மீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று தனது முகநூல் பக்கம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.