முன்னெப்போதும் இல்லாத வகையில், சென்னை வாசிகள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
Chennai: சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், நகரத்தில் நிலத்தடி மெட்ரோ ரயில் திட்டத்தால் தான் குடிநீர் பற்றக்குறை ஏற்பட்டுள்ளதாக சென்னை மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையிம் அருகில் உள்ள பக்தசவத்சலம் சாலையில் வசிப்பவர் கூறும்போது, இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததற்கும் மெட்ரோ சுரங்கபாதையே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் வாசியான விஜய் கூறும்போது, ரூ.1.5 லட்சம் செலவில் 9,000 லிட்டர் அளவு கொண்ட நிலத்தடி தண்ணீர் தொட்டியை அமைக்கும் படி நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம். எவ்வளவு கடும் கோடைகாலமாக இருந்தாலும், மெட்ரோ ரயில் திட்டம் துவங்குவதற்கு முன்பு நாங்கள் தண்ணீர் பற்றாக்குறையை கண்டதில்லை என்றார்.
ராஜேஸ்வரி என்ற மற்றொருவர் கூறும்போது, அரசு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து அரசு ஆய்வு செய்திருக்க வேண்டும். காலம் கடந்துவிட்டது என்று அவர் கூறினார்.
45 கி.மீ கொண்ட சென்னை மெட்ரோ திட்டத்தில் 24 கி.மீ தொலைவில் சுரங்கப்பாதையிலே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் கூறும்போது, இதுபோன்ற பிரச்சனைகளை மற்ற மாநிலங்களில் நாங்கள் எதிர்கொண்டதில்லை. இப்போது இதுகுறித்து எந்த ஆய்வும் செய்யாமல் நாங்கள் எதுவும் பேச முடியாது. இதை விட அதிக தூரத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்ட மாநிலங்களில் கூட நாங்கள் இப்படி பிரச்சனைகளை கேட்டதில்லை என்று அவர் கூறினார்.
உள்ளூர் வாசியான பன்னீர்செல்வம் என்பவர் கூறும்போது, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குளிக்கிறேன் என்றார். மேலும், துணிகளை துவைப்பதற்கு 30 கி.மீ தொலைவில் உள்ள எனது சகோதரி வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறினார்.
இல்லத்தரசியான ஜெயா என்பவர் கூறும்போது, தேர்தல் தொடங்கும் வரைக்கூட தண்ணீர் ஒழுங்காக வந்தது. ஆனால், தற்போது நிலை மிகவும் மோசமாக உள்ளது. எப்போதாவது தான் வருகிறது. அப்போதும் தண்ணீர் மிகவும் மோசமாக வருகிறது என்று அவர் கூறினார்.
சென்னையில், கடந்த 2015 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்தும், நீரை சேமிக்க எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாநில அரசானது, மழை வருவதற்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.