உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை எதிர்த்து மத்திய நெஞ்சாலை துறை திட்ட இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு தொடுத்துள்ள இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளது.
அதில், குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் என்னென்ன? விரிவான திட்டம் தீட்டப்பட்டதா? சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? அனுமதி பெறாமல் எப்படி நிலத்தை கையகப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறீர்கள், சுற்று சூழல் அனுமதி பெற எவ்வளவு காலம் ஆகும்.
முன்னதாக நிலத்தைக் கையகப்படுத்தாமல், சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், 8 வழிச் சாலைத் திட்டம் என்பது நாட்டுக்கு முக்கியமானது. எனவே, அதற்காக நிலத்தைக் கையகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், 8 வழிச் சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர தாமதமானால் என்ன செய்வீர்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளிக்கையில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 8 வழிச் சாலைத் திட்டத்தை தொடங்க மாட்டோம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, அவசியமான திட்டம் என்கிறீர்கள், ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதம் ஆகும் என்கிறீர்கள். இதை நாங்கள் குழப்பமாகவே பார்க்க வேண்டியுள்ளது என நீதிபதிகள் கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.