சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை வழிச் சாலையை, 10,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, ‘சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துவிட்டது. ஆனால், நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்போது திட்டத்தை செயல்படுத்துவது தாமதமாகியுள்ளது' என்று கூறினார்.
அவர் மேலும், ‘தமிழகத்தில் இருக்கும் 40 நெடுஞ்சாலைகளை மேம்படுத்தலாம் என்று கூறி முடிவெடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுடன் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெறும்' என்று தெரிவித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)