This Article is From Apr 06, 2019

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு: ஏப்.8ல் தீர்ப்பு..!

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் ஏப்.8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு: ஏப்.8ல் தீர்ப்பு..!

சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை கொண்டுவருவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்ந்து, பல பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பரவலாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடைவிதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் பல கட்டங்களாக போராட்டங்களும் நடத்தி வந்தனர்.

எனினும், மத்திய அரசு துணையுடன், தமிழக அரசு 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வந்தது. இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும், நில உரிமையாளர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும், அதில் இந்த திட்டத்தை எதிர்த்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்ததது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்கு முன்பாக தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் 8ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு 5 மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

.