This Article is From Jul 22, 2018

சென்னை 4 மாடி கட்டிட விபத்தில் ஒருவர் பலி, 17 பேர் படுகாயம்

தேசிய பேரிடர் மீட்பு படை, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர்  விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்

சென்னை 4 மாடி கட்டிட விபத்தில் ஒருவர் பலி, 17 பேர் படுகாயம்
Chennai:

சென்னை கந்தன் சாவடியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடத்தின் இரும்பு சாரமும், தூண்களும் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 17 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மாலை 7.20 மணி அளவில், ஓ.எம்.ஆரில் புதிதாக கட்டப்பட்டு வந்த மருத்துவமனை கட்டிடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர்  விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் இடிபாடுகளில் தேடுதல் பணி நடைபெற்றது.

"அது ஒரு நான்கு மாடி கட்டிடம். அந்த கட்டிடத்தின் சாரமும், இரும்புத் தூண்களும் சரிந்து விழுந்தன. கட்டிட பகுதிக்குள் இருந்த இடிபாடுகளில் இருந்து அனைவரும் மீட்க்கப்பட்டு விட்டனர். சாலை பக்க இடுபாடுகளில் தேடுதல் நடைபெற்று வருகிறது" என்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் " விபத்தில் 5 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்றார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து 61 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, இன்னும் சரியான தகவல் இல்லை. ஏதேனும் விதிமீறல் உள்ளதா என்பது பற்றி விசாரணை நடப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

மேலும், இந்த கட்டிடத்தை கட்ட தனியார் மருத்துவமனை உரிய அனுமதி பெற்றதா என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. பொறியாளர்கள் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

 

.