This Article is From Jul 03, 2018

சென்னையில் ஐடி பெண் ஊழியர் அலுவலகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பிரியங்கா திங்களன்று அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சென்னையில் ஐடி பெண் ஊழியர்  அலுவலகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
Chennai:

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பிரியங்கா எனும் பெண் ஊழியர் திங்களன்று அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

27 வயதான பிரியங்கா ஆந்திர மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். சென்னை ஆவடியில் தங்கி துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். திங்கள் மாலை 4.45 மணிக்கு அவர் 9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலே உயிரிழந்த பிரியங்காவின் உடலைக் கைப்பற்றிய போலிசார் பிரேதப் பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியங்காவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. எந்த தற்கொலை குறிப்பும் அவரிடத்தில் கிடைக்கவில்லை என்பதால் சொந்த பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்

தற்கொலை செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக சொந்த ஊரில் உள்ள தன்னுடைய அத்தையை அழைத்து தான் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒன்று செய்யப் போவதாக பிரியங்கா தெரிவித்திருக்கிறார்.

பிரேத பரிசோதனை முடிவு வந்ததற்கு பிறகு அவருடைய மொபைல் மற்றும் கணிணியை ஆராய்ந்து, அடுத்த கட்ட விசாரணை நடத்த இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

.