முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களை இந்த ஆய்விற்காக தேர்வு செய்துள்ளது கே7 நிறுவனம்.
Chennai: இந்தியாவில் மூன்றில் ஒரு நெட்டிசன், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்றும், நகரங்களைப் பொறுத்தவரை சென்னையில்தான் இதில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் புதிய ஆய்வறிக்கைத் தகவல் தெரிவித்துள்ளது.
கே7 கம்ப்யூட்டிங் என்னும் சைபர் செக்யூரிட்டி நிறுவனம் இது குறித்தான ஆய்வை, இந்தியாவில் 20 நகரங்களில் நடத்தியுள்ளது. முக்கியமாக முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களை இந்த ஆய்விற்காக தேர்வு செய்துள்ளது கே7 நிறுவனம்.
ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையிலான காலக்கட்டத்தில், சென்னையில் 48 சதவிகிதம் பேர் சைபர் அட்டாக்கிற்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கிறது ஆய்வு முடிவு.
இது குறித்து கே7 நிறுவனத்தின் சி.இ.ஓ, கே.புருஷோத்தமன், “நாட்டின் முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் சைபர் வழி தாக்குதல் அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் அந்த தாக்குதலில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறுகிறார்.
மெட்ரோ நகரங்களில் வார நாட்களிலேயே இதைப் போன்ற சைபர் வழி தாக்குதல் அதிகம் நடப்பதாகவும், வெள்ளிக் கிழமைகளில் தாக்குதல் மிக அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு சொல்கிறது.
மின்சாதனப் பொருட்களை தயாரிப்பவர்களும் அதைப் பயன்படுத்துபவர்களும் சைபர் தாக்குதல் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாததும் இப்படிப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளதாம். மின்சாதனப் பொருடகளிலேயே ரவுட்டர்தான் அதிக சைபர் வழி தாக்குதலுக்கு உள்ளாகிறதாம். அதைத் தொடர்ந்து பிரின்ட்டர்கள், ஐபி கேமராக்கள், மீடியா பிளேயர்கள், செட்-டாப் பாகஸ் மற்றும் ஸ்மார்ட் டிவிக்களும் சைபர் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனவாம்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)