This Article is From Oct 18, 2018

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… சென்னைவாசிகள் மகிழ்ச்சி!

சென்னையில் இருக்கும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த திங்கள் கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… சென்னைவாசிகள் மகிழ்ச்சி!

லாரி உரிமையாளர்கள் நேற்றிரவு, தங்களது ஸ்டிரைகை வாபஸ் பெற்றுள்ளனர்.

Chennai:

சென்னையில் இருக்கும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த திங்கள் கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் நேற்றிரவு, தங்களது ஸ்டிரைகை வாபஸ் பெற்றுள்ளனர்.

சென்னை நகரத்துக்குள் நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். 

தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கு அரசு தரப்பிடமிருந்து, பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் நடராஜன், ‘பண்டிகை சமயத்தில் நாங்கள் மக்களுக்கு மேற்கொண்டு பிரச்னை கொடுக்க விரும்பவில்லை. தற்போது நிலவி வரும் பிரச்னை குறித்து அரசு தரப்பு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளது. அதனாலேயே ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுகிறது' என்றுள்ளார்.

தண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக்கால், சென்னையில் இருக்கும் ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ' வர்த்தக கட்டடம் மூடப்பட்டது. அதேபோல, பல ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு சொல்லி, விடுமுறை அளித்தது. 

சென்னை குடிநீர் வாரியம், தண்ணீர் தட்டுபாட்டை சமாளிக்க எடுத்த நடவடிக்கைகளும் நினைத்த அளவுக்குக் கை கொடுக்கவில்லை. இதனால் மக்கள் திக்குமுக்காடினர். 

இந்த மாத துவக்கத்தில் சென்னை உயர் நீதிமன்றம், ‘சென்னை நகரத்து நிலத்தடி நீரை வியாபார நோக்கில் பயன்படுத்தத் தடை விதிக்கிறோம்' என்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கிய போதும், கேன் குடிநீர் உரிமையாளர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து பெருநகர சென்னை கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முரளி, ‘அரசு, மற்ற நிறுவனங்களுக்கு தடை உத்தரவை அமல்படுத்தலாம். ஆனால், அடிப்படைத் தேவையான தண்ணீருக்குத் தடை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். அப்படி செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்' என்று கூறியுள்ளார். 


 

.