ரூ. 65 கோடி செலவில் வேலூரில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வேலூரில் இருந்து சென்னைக்கு 2 வாரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை கையாண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் ரூ. 65 கோடியில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்னும் 2 வாரங்களில் ஜோலார் பேட்டையில் இருந்து வேலூருக்கு குடிநீர் கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மக்கள் வசதிக்காக 4 குழாய்களில் தண்ணீர் விநியோகிக்கும் லாரிகளின் சேவையை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் ஒருநாளுக்கு 520 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மழை நீர் சேமிப்பு திட்டத்தை கண்காணிப்பதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 வாரங்களில் பணிகள் முழுமையடைந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். 2017-ல் கடும் வறட்சி ஏற்பட்டபோது 450 மில்லியன் லிட்டர் தண்ணீரை வழங்கினோம். தற்போது 520 மில்லியன் தண்ணீரை வழங்கி வருகிறோம்.
இதனை நவம்பர் வரைக்கும் வழங்குவோம் என்று கூறியிருந்தோம். அதற்குள்ளாக மழை பெய்து விடும் என்பதால் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.