This Article is From Jul 23, 2018

சென்னையில் வாலிபரை சரமாரியாக தாக்கிய எஸ்.ஐ… ஆறுதல் சொன்ன கமிஷனர்!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில், கடந்த 19ம் தேதி, போலீஸ் வாகன சோதனை நடத்தியுள்ளது

சென்னையில் வாலிபரை சரமாரியாக தாக்கிய எஸ்.ஐ… ஆறுதல் சொன்ன கமிஷனர்!

சென்னையில் கடந்த வியாழக்கிழமை இரவு, வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை போலீஸார் சரமாரியாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விஷயம் பூதாகரமாகியுள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாலிபரின் வீடு தேடி சென்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். 

சென்னை சேத்துப்பட்டு பகுதியில், கடந்த 19ம் தேதி, போலீஸ் வாகன சோதனை நடத்தியுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அரூண் சேட் மற்றும் அவரது நண்பர்களை, போலீஸார் மடக்கிப் பிடித்து சோதனை செய்துள்ளனர். அரூணிடம், ஒரிஜினல் ஆர்.சி இல்லை என்பதால் எஸ்.ஐ இளையராஜா என்பவர் கொதிப்படைந்துள்ளார். அதற்கு அரூண், ‘நான் வண்டியை விட்டுவிட்டு செல்கிறேன். அதற்கான ரசீதை எனக்குக் கொடுக்கவும். காலையில் என் ஆர்.சி-யை காண்பித்துவிட்டு வண்டியை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், எதையும் கேட்காமல் இளையராஜா, அரூணை சரமாரியாக  தாக்கியுள்ளார். இதனால், அவரின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒரு சிறிய வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரூண், ‘என்னிடம் ஆர்.சி ஒரிஜினல் இல்லை என்பது தெரியும். அதனால் தான் நான், எஸ்.ஐ-யிடம் எனது இரு சக்கர வாகனத்தை விட்டுச் செல்கிறேன். அதற்கான ரசீதை மட்டும் கொடுங்கள். காலையில் ஆர்.சி-யுடன் வந்து வாகனத்தை மீட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தினேன். ஆனால், அதைக் கேட்காமல் அவர் என்னைத் தாக்க ஆரம்பித்தார். போனை எடுத்து பெற்றோர்களுக்கு சொல்லலாம் என்று நினைத்தேன். அதையும் அவர் பிடிங்கிவிட்டார்’ என்று நடந்த சம்பவம் குறித்து விளக்கினார். 

வீட்டுக்கு வந்த அரூண், இந்த கொடூர சம்பவத்தைப் பற்றி முகநூலில் பதிவிட, அதை பலர் ஷேர் செய்து வந்தனர். விஷயம் பூதாகரமாகவே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அரூணை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். எஸ்.ஐ. இளையராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

.