செம்பரம்பாக்கம் ஏரி, முற்றிலும் வறண்டுவிட்டதால் அங்கு மீன் பிடிக்கும் தொழிலும் நலிந்துவிட்டது.
Chennai: சென்னையில் மிகப் பெரிய நீர் ஆதரமாக விளங்கும் செம்பரபாக்கம் ஏரி, முற்றிலும் வறண்டுள்ளது. சென்ற ஆண்டு பொய்த்துப் போன பருவமழை காரணமாகவே செம்பரம்பாக்கம் ஏரி சீக்கிரமே வறண்டுள்ளது. இந்த ஏரிதான் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மழையின் போது நிரம்பி, சென்னை நகரத்தை வெள்ளத்தால் மூழ்கடித்தது.
இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ வாட்டர் அமைப்பு, நகரவாசிகளுக்குக் கொடுத்து வந்த தண்ணீர் விகிதத்தை 40 சதவிகிதம் குறைத்துள்ளது. தேனாம்பேட்டையைச் சேர்ந்த் வி.கலைசெல்வி, “எங்களுக்கு ஒரு நாளைக்கு 5 குடம் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படுகிறது” என்று புகார் தெரிவிக்கிறார். NDTV-யிடம் அவர் தொடர்ந்து பேசும்போது, “தேர்தலுக்கு முன்னர் எங்களுக்கு தண்ணீர் சீராக வந்து கொண்டிருந்தது. ஆனால், இப்போதோ தண்ணீர் அறவே வருவதில்லை. வெறும் 1 மணி நேரம்தான் இப்போதெல்லாம் தண்ணீர் வருகிறது. தண்ணீர் லாரிகளும் காலை 10 முதல் 11 மணி வாக்கில் வருகின்றன. இது மிகவும் கடினமானதாக உள்ளது” என்று தன் நிலை குறித்து விளக்கினார் கலைசெல்வி.
12 லட்சம் பேர் வசிக்கும் ஐடி துறையினர் இருக்கும் பகுதியிலும் இதே நிலைமைதான். அங்கும் சென்னை மாநகராட்சி, சரியான வகையில் தண்ணீர் சப்ளை செய்வதில்லை. அவர்கள் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களிடம் காசு கொடுத்து நீர் வாங்குகிறார்கள். ஒரு டேங்க் தண்ணீருக்கு சுமார் 1,500 ரூபாய் வரை பணம் கொடுக்கின்றனர் மக்கள்.
செம்பரம்பாக்கம் ஏரி, முற்றிலும் வறண்டுவிட்டதால் அங்கு மீன் பிடிக்கும் தொழிலும் நலிந்துவிட்டது. ஏரியில் மீன் பிடித்து வந்த விஜயா மற்றும் சித்ரா, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் சோகத்தில் இருக்கின்றனர். “முன்னரெல்லாம் நாங்கள் ஒரு நாளைக்கு சுமார் 1000 ரூபாய்க்கு மீன்களை விற்போம். இப்போதோ 500 ரூபாய்க்குக் கூட மீன்கள் கிடைப்பதில்லை” என்றனர்.
மனிதர்களின் நிலைமையைவிட கால்நடைகளின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. 200 ஆடுகள் வைத்திருக்கும் பரமசிவன், “இந்த வறண்ட ஏரிக்குத்தான் எனது ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறேன். எதாவது ஒரு இடத்தில் நீர் தேங்கி நிற்கும். அதையாவது இவைகள் குடிக்கட்டும் என்ற நினைப்பில்தான் இங்கு வருகிறேன்” என்று வேதனைப்படுகிறார்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகளோ, பருவமழை ஆரம்பிக்கும் வரை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருக்கும் நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்து, குறைந்தபட்ச சப்ளை இருக்கும்படி பார்த்துக் கொள்வோம் என்று உறுதியளிக்கின்றனர்.
நகரின் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க சென்னையைச் சுற்றி நீர்நிலைகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழத் தொடங்கியுள்ளன.