பல நகரவாசிகளும், இந்த நிலைமைக்கு அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
Chennai: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் சென்னையில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவியது. தற்போது அதே நிலைமைக்கு தமிழக தலைநகரம் திரும்பிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நகருக்கு வரும் குழாய் வழி தண்ணீரில் 40 சதவிகிதம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொய்த்துப் போன பருவமழையைத் தொடர்ந்து சென்னைக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வந்த நீர் நிலைகள் வறண்டு போயின. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு 550 மில்லியன் லிட்டர் நீர்தான் வழங்கப்படுகிறது. ஆனால் தேவைப்படுவதோ 800 மில்லியன் லிட்டர் நீர்.
இந்த தண்ணீர் பஞ்சத்தை மேலும் கடினமாக்கும் வகையில், பல இடங்களில் சென்னை மாநகராட்சி கொடுக்கும் தண்ணீரில் துர்நாற்றம் வருவதாக கூறுகின்றனர் மக்கள். சிலர், “கழிவுநீருடன் தண்ணீர் கலந்து வருகிறது” என்று கூறி அதிர்ச்சி அளிக்கின்றனர்.
சென்னையின் ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. ஆட்டோ ஓட்டுநரின் மனைவியான இவர், ஒரு நாளைக்கு 6 குடம் தண்ணீர்தான் தங்களுக்குக் கொடுக்கப்படுகிறது என்றும், அதுவும் அசுத்தமாக இருக்கிறது என்றும் புகார் கூறுகிறார். “அவர்கள் கொடுக்கும் நீர், சமைக்க மட்டும்தான் சரியாக இருக்கிறது. குளிப்பது, துவைப்பது போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நீர் இல்லாமல் அவதிப்படுகிறோம்” என்கின்றார் தேவி.
பல இடங்களில் ஒரு நாளைக்கு 6 குடம் தண்ணீருக்கு மேல் தரப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு.
அதே பகுதியைச் சேர்ந்த பி.மல்லிகா, “மாநகராட்சி கொடுக்கும் நீரில் சமைக்க முடிவதில்லை. வாரா வாரம் நீர் வாங்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம்” என்கிறார்.
ஆயிரம் விளக்கில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஐடி துறையினர் இருக்கும் பகுதியிலும் இதே நிலைதான். அவர்கள் தனியார் தண்ணீர் லாரிகளிடம் இருந்து காசு கொடுத்து நீர் வாங்கி பயன்படுக்கிறார்கள்.
40 சதவிகித குழாய் வழி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு குடும்பத்திடம் பேசினோம். “ஒருமுறை பயன்படுத்திய பேன்ட்-ஐ மேலும் ஒருமுறை பயன்படுத்து என்று மகனிடம் சொல்கிறேன். தினமும் குளிப்பதும் கடினமாகத்தான் உள்ளது. பாலுக்கு செலவு செய்வதை விட, தண்ணீருக்குத்தான் நாங்கள் அதிகம் செலவழிக்கிறோம்” என ஆதங்கப்படுகிறார்.
பூழல், சோழவரம், கலிவேலி, பழவேற்காடு மற்றும் மதுராந்தகம் ஏரிகள்தான் சென்னை மற்றும் அதனை சுற்றியிருக்கும் இடங்களுக்கு நீர் ஆதரமாக திகழ்கின்றன. இந்த அனைத்து ஏரிகளும் நகரத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு 550 மில்லியன் லிட்டர் நீர்தான் வழங்கப்படுகிறது. ஆனால் தேவைப்படுவதோ 800 மில்லியன் லிட்டர் நீர்..
சென்னைக்கு அருகே மேலும் ஒரு நீர்நிலையை உருவாக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பிலேயே இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது, அனைத்து நீர்நிலைகளிலும் நிரம்பி வழிந்தன. பல லட்சம் லிட்டர் தண்ணீர் கடலில் கலந்தன. அந்த தண்ணீரை திறம்பட தேக்கி வைக்க அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடல் நீரை குடிநீராக்கும் புதிய ஆலையையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
மாநகராட்சி அதிகாரிகள் NDTV-யிடம் இது குறித்து கூறும்போது, வீராணம் ஏரியைத் தவிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் நீராதாரத்தையும் பயன்படுத்திகிறோம். பருவமழை வரும் வரை நகரின் அடிப்படைத் தேவைக்காக தண்ணீர் தருவதற்கு நாங்கள் முயன்று வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
பல நகரவாசிகளும், இந்த நிலைமைக்கு அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். ஜூன் இறுதியில் தொடங்கள உள்ள பருவமழை காலம் வரை இந்தப் பிரச்னை தொடரும் எனத் தெரிகிறது.