This Article is From Dec 16, 2018

சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாஹெல் தேர்வு!

நான்கு முதல்வர் போட்டியாளர்களை ராகுல் காந்தி நேற்று சந்தித்ததை தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தது

Raipur:

நான்கு முதல்வர் போட்டியாளர்களை ராகுல் காந்தி நேற்று சந்தித்ததை தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. அதன்படி, சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜகவை மிக மோசமான தோல்வியை சந்திக்க வைத்து கட்சியை வழிநடத்திய சத்தீஸ்கர் மாநில தலைவர் பூபேஷ் பாஹெல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதலமைச்சராக மூத்த தலைவர் கமல்நாத்தை காங்கிரஸ் அறிவித்தது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட்டை தேர்வு செய்து அறிவித்தது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. நாடாளுமன்ற உறுப்பினர், தம்ராத்வாஜ் சாஹூ, மாநிலத் தலைவர் புபேஷ் பாஹெல், மூத்த தலைவர் டி.எஸ். சிங்தியோ ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இதில் புபேஷ் பெஹலுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.புனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில தலைவர் பூபேஷ் பாஹெல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நாளை மாலை 5.30 மணிக்கு அவர் பதவியேற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச முதலமைச்சராக மூத்த தலைவர் கமல்நாத், ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியேற்பை தொடர்ந்து நாளை மாலை 4.30 மணி அளவில் சத்தீஸ்கரில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.