தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வருவதற்கு வாய்ப்பில்லை என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Raipur: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வெட்டுக் கிளிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. தற்போது, மற்ற மாநிலங்களுக்கும் அவை பரவத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக சத்தீஸ்கர் மாநில அதிகாரிகள் கூறும்போது, 'மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம், மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா ஆகியவற்றை வெட்டுக்கிளிகள் அடைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் சத்தீஸ்கருக்கு அவை வந்து விடும்' என்று தெரிவித்தனர்.
வேளாண் அதிகாரிகளும், விவசாயிகளும் வெட்டுக்கிளி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சித்தடுப்பு மையம் (CIPMC) வலியுறுத்தியுள்ளது.
மலத்தியான், ஃபென்வாலரேட் மற்றும் குயினால்போஸ் ஆகிய மருந்துகளை பயன்படுத்துமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இதேபோன்று வெட்டுக் கிளிகள் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காக்க குளோர்பிரிபோஸ், டெல்டாமெத்ரின், டிப்ளுபென்சரான், பிப்ரோனில் மற்றும் லம்டா - சைகலோத்ரின் ஆகியவற்றையும் விவசாயிகள் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் பாதிப்பை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகள் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக சத்தீஸ்கருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக எல்லை மாவட்டமான ராஜ்நந்தகானில் வேளாண் அதிகாரிகளும், விவசாயிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக ராஜ்நந்த்கானில் தடுப்பு மருந்துகள் பயிர்களுக்கு தெளிக்கப்பட்டுள்ளன.
வெட்டுக்கிளிகள் வந்தால், அவற்றை பூச்சி மருந்துடன் எதிர்கொள்வதற்காக 20 டிராக்டர்களில் பூச்சி மருந்துகள் நிரப்பப்பட்டு அவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனை தவிர்த்து, விவசாயிகளும் குழுக்கள் அமைத்து கையில் ஸ்டீல் தட்டுகளை வைத்துக் கொண்டுள்ளனர். இதனை தட்டி ஒலி எழுப்பும்போது வெட்டுக்கிளிகள் பின்வாங்கி ஓடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வருவதற்கு வாய்ப்பில்லை என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)