This Article is From Nov 05, 2018

‘சத்தீஸ்கரில் ‘டாக்டர் முதல்வருக்குக்’ கீழ் மருத்துவத் துறை மோசமாக இருக்கிறது!’

சத்தீஸ்கர் மாநிலத்தில் ‘டாக்டர் முதல்வருக்குக்’ கீழ், மருத்துவத் துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜ் பாபர் காட்டமாக விமர்சித்துள்ளார்

‘சத்தீஸ்கரில் ‘டாக்டர் முதல்வருக்குக்’ கீழ் மருத்துவத் துறை மோசமாக இருக்கிறது!’

நக்சல் தொடர்பான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும், பாபர்

Raipur:

சத்தீஸ்கர் மாநிலத்தில் ‘டாக்டர் முதல்வருக்குக்' கீழ், மருத்துவத் துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜ் பாபர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ‘மருத்துவ சேவை குறித்து 21 மாநிலங்களில் எடுத்த புள்ளிவிவரங்கள்படி சத்தீஸ்கர் மாநிலம் 20வது இடத்தில் உள்ளது. ஆம்மாநில முதல்வர் ரமண் சிங் ஒரு மருத்துவர். அவருக்குக் கீழ் மாநிலத்தின் மருத்துவத் துறை வெகுவாக முன்னேற்றம் அடையும் நினைத்து வாக்களித்த மக்களுக்கு இந்த புள்ளிவிரம் பெருத்த ஏமாற்றமே.

கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கரை ஆட்சி செய்து வரும் ரமண் சிங், மருத்துவத் துறையை அவசர பிரிவுக்குத் தள்ளியுள்ளார். நக்சல் தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பஸ்தர் பகுதியில் ஒரு மருத்துவமனையைக் கூட மாநில முதல்வர் கட்ட முயற்சி எடுக்கவில்லை. நக்சல் தாக்குதல்களால் காயமடையும் பாதுகாப்புப் படை வீரர்களுக்காகக் கூட இதை அவர் செய்யவில்லை' என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

சத்தீஸ்கரில் வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11 ஆம் தேதி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நக்சல் தொடர்பாக பாபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார் என்று கூறி பாஜக அவர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது. அது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் நக்சல் இயக்கத்தினரை ‘புரட்சியாளர்கள்' என்று எப்போதும் சொல்லவில்லை. ஆனால், நான் அப்படி சொல்லியதாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது. நான் நக்சல் தொடர்பாக நிலவி வரும் பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்று தான் சொல்லி வருகிறேன். ஆயுதங்களை வைத்து நக்சல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றேன்' என்று விளக்கம் அளித்துள்ளார்.

.