"பொருளாதாரம் குறித்து அதிகம் கவலை கொள்கிறேன்"
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றக் காவல் விதித்து, திகார் சிறையில் அடைத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், ட்விட்டரில் அவர் துடிப்புடன் இருப்பதை அது நிறுத்தவில்லை. சில நாட்களுக்கு முன்னர் தான் சம்பந்தப்பட்டிருக்கும் வழக்கு குறித்து தனது குடும்பத்தினர் மூலம் ட்வீட் பதிவிட்ட சிதம்பரம், இன்று மீண்டும் புதிய ட்வீட்களை இட்டுள்ளார்.
“உங்களின் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. நான் கடந்த சில நாட்களாக ஏழைகளுடன் பேசும் வாய்ப்பைப் பெற்றேன். அவர்கள் நியாயத்தையும் அநியாயத்தையும் பிரித்துப் பார்க்கும் தன்மையைக் கண்டு வியக்கிறேன்.
பொருளாதாரம் குறித்து அதிகம் கவலை கொள்கிறேன். ஏழைகள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம், குறைந்த வேலைவாய்ப்பு, குறைந்த வர்த்தகம், குறைந்த முதலீடு உள்ளிட்டவை இந்தியாவின் ஏழைகளையும் நடுத்தர வர்க்கத்தையும் கடுமையாக பாதிக்கும். இந்த இருளிலிருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
2019-20 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி, 5 சதவிகிதத்தில் இருக்கிறது. இது முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது 0.8 சதவிகிதம் குறைவானதாகும்.
இந்நிலையில் வாகனத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது குறித்து நிர்மலா சீதாராமன், “நாட்டில் வாகனத் துறை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பி.எஸ் 6 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை, வாகனங்களைப் பதிவு செய்வதில் இருக்கும் விதிமுறை மாற்றம், மற்றும் இக்கால இளைஞர்களின் மனநிலையும் முக்கிய காரணம். அவர்கள் புதிய கார் வாங்குவதற்கு இ.எம்.ஐ கட்ட தயாராக இல்லை. ஆனால், உபர், ஓலா மூலம் வாடகை காரிலோ அல்லது மெட்ரோ ரயில் மூலமோ பயணிக்க விரும்புகிறார்கள்' என்று தெரிவித்தது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம், 14 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றம், இரண்டு வாரங்கள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துதான் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
PTI தகவல்களுடன்