பொதுமக்கள் விஷயம் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவிக்க கூடாதென்று சிதம்பரம் கூறியுள்ளார்.
Thiruvananthapuram: குடியுரிமை சட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனை கண்டித்துள்ள ப.சிதம்பரம், இவ்வாறு தெரிவிப்பது ராணுவ தலைமை தளபதியின் வேலை என்று விமர்சித்துள்ளார். அவருக்கு தொடர்பில்லாத வேலைகளில் அவர் தலையிடக் கூடாது என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகை முன்பாக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
போராட்டத்தின்போது ப.சிதம்பரம் பேசியதாவது-
அரசியல் தலைவர்களை இவற்றை செய்ய வேண்டும் என்று ராணுவ தலைமை தளபதி கூறுவது என்பது அவருடைய வேலை அல்ல. அதேபோன்று போர்க்களத்தில் இப்படி சண்டையிட வேண்டும் என்று நாங்கள் கூறுவதும் எங்களுடைய வேலையல்ல. ராணுவம் தங்களுடைய அனுபவம், திட்டப்படி சண்டையிடுகிறது. அதேபோன்றுதான் நாட்டின் அரசியலை எங்களது அனுபவத்தின்படி வழி நடத்துகிறோம்.
போராட்டம் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் இவ்வாறு பேச வேண்டும் என்று ராணுவ தலைமை தளபதி அரசால் நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதுவா வேலை?. இந்த காரியம் வெட்கக் கேடாக உள்ளது. நான் அவருக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன்... ராணுவ தலைமை தளபதியான நீங்கள் உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அரசியல்வாதிகள் அவர்கள் செய்ய வேண்டியதை செய்வார்கள்.
இந்திய மாணவர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏனென்றால், இந்த சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இவையிரண்டும் முஸ்லிம்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஆகும். இந்த சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது. இதனை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு ப. சிதம்பரம் பேசினார்.
முன்னதாக கடந்த வியாழன் அன்று குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், 'போராட்டத்தின்போது போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடுமாறு சில தலைவர்கள் தூண்டுகின்றனர். தலைமைத்துவம் என்பது வழி நடத்துதலாகும். நீங்கள் முன்னோக்கி செல்லும்போது உங்களை எல்லோரும் பின்பற்றுவார்கள். ஆனால் ஏராளமான மாணவர்களை தவறான பாதையில் வழி நடத்தும் தலைவர்களைத்தான் பார்க்க முடிகிறது' என்று கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐதராபாத் மக்களவை எம்.பி.யும், மஜ்லிஸ் கட்சியின் தலைவருமான அசாசுதீன் உவைசி கூறுகையில், 'தனக்கு இவ்வளவுதான் அதிகாரம் என்பதை அறிந்து வைத்திருப்பதும் தலைமைத்துவம் ஆகும். குடிமக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது என்பதும், நீங்கள் தலைமைதாங்கும் நிறுவனத்தின் பொறுப்பு ஆகும்' என்று பிபினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
டிசம்பர் 31-ம் தேதியுடன் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் ஓய்வு பெறுகிறார்.