This Article is From Oct 25, 2018

தெலங்கானா வாக்காளர் பட்டியலில் போலிகள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன : தலைமை தேர்தல் ஆணையர்

தெலங்கானா வாக்காளர் பட்டியலில் கடந்த 2014-ல் 2.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 2.73-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.

Hyderabad:

நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி தெலங்கானா வாக்காளர் பட்டியலில் இருந்து போலிகள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார். 

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஒரே கட்டமாக வரும் டிசம்பர் 7-ம்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன. 

இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெலங்கானாவில் 3 நாட்களாக முகாமிட்டு தேர்தல் பணிகளை பார்வையிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தெலங்கானா வாக்காளர் பட்டியலில் போலிகள் முழுவதும் நீக்கப்பட்டு விட்டன. வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் பணிகளை அச்சமின்றி சுதந்திரமாக நிறைவேற்ற வேண்டும் என்றார். 

தெலங்கானா வாக்காளர் பட்டியல் கடந்த 12-ம்தேதி வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 2.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1.38 கோடி பேர் ஆண்கள், 1.35 கோடி பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 2,663 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2014-ம் ஆண்டு நிலவரப்படி மொத்தம் 2.82 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். இவற்றில் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு 22 லட்சம்பேர் நீக்கப்பட்டனர். புதிதாக 12 லட்சம்பேர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 

தெலங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இவற்றில் எஸ்.சி. பிரிவுக்கு 19 தொகுதிகளும், எஸ்.டி. பிரிவுக்கு 12 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 32 ஆயிரத்து 574 வாக்குச் சாவடிகள் இந்த தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளது. 

.